பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று (வியாழக்கிழமை) இக்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ‘பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை’, ‘வியாபார உரிமம் இல்லாது மதுபானசாலை இயங்கலாமா?’, ‘வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த மதுபானசாலை கடந்த 7 வருட காலமாக அனுமதிப்பத்திரம் மற்றும் கட்டட அனுமதியின்றி இயங்கி வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், இந்த மதுபானசாலை பாடசாலை மாணவர்களும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, இந்த மதுபானசாலையை அகற்றக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதால் மேலும் வழக்குகளைப் பதிவு செய்ய முடியாதுள்ளதாகவும், மதுபானசாலையை அகற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறியிடம் மகஜர் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், இதனை அகற்றாவிடின் தமது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.