காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கில் போராட்டம்!


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய குறித்த பேரணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் முடிவடைந்தது.

ர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் யாழ்ப்பாணம் பொதுசன நூலக மூன்றலில் காலை 10.30 மணி அளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் வைத்தியசாலை அருகில் உள்ள கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன், சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்படும் மகஜரும் வாசிக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரனையே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், மனித உரிமைகள் இல்லாத நேரத்தில் மனித உரிமைகள் தினம் எதற்கு ,சர்வதேச நீதி வேண்டும், வெள்ளைவானில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே ,வேலைக்கு சென்ற பாடசாலை சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே போன்ற கோசங்களையும் இதன் போது எழுப்பினர்.

உங்கள் இரானுவத்தை நம்பி ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் போனார்கள்? போன்ற கேள்வியையும் வாசகத்தில் உள்ளடக்கியிருந்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ, எமது உரிமை ?, எமது எதிர்காலம் ? இப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila