32 வயதுடைய எட்வேட் ஜீலியன் என்பவரின் வீட்டிலிருந்தே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணவன் மனைவிக்கிடையேயான குடும்பப் பிரச்சனை காரணமாக, கணவனை பிரச்சனையில் சிக்கவைத்து தண்டிப்பதற்காக அவர் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக மனைவி பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையிலேயே இந்த பொருட்கள் அகப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தோடு சம்மந்தப்பட்டவர் என்று கைது செய்யப்பட்டுள்ளவர், நீண்டகாலமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர் என்றபோதும், அவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாமல் எவ்வாறு தப்பி இருந்தார் என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன. குற்றப்புலனாய்வுத்துறையினர் இவ்விடயம் குறித்து பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதுபற்றி ஆராய்வதை விடவும், இந்தச் சம்பவம் தோற்றிவித்திருக்கும் விளைவுகளை பார்க்கலாம்.
எடுக்கப்பட்ட தற்கொலை அங்கியானது, 2008 ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் அச்சிடப்பட்ட சிங்கள நாளிதழ் ஒன்றில் சுற்றியிருந்ததும், அது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமொன்றிலிருந்து எடுக்கப்பட வில்லை என்பதும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. சுருக்கமாக கூறுவதானால், இந்த பொருட்கள், 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதாவது மிக அன்மையில் வேறொரு இடத்திலிருந்து மறவன்புலவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகின்றது.
எதற்காக இவ்வாறு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில் பல முனைகளில் கேள்விகளை தொடுக்கலாம். புதிய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பதும், படை முகாம்களை மக்கள் நடமாட்டப் பகுதிகளிலிருந்து அகற்றுவதையும் தேசிய நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளாகவே கூறுகின்றது.
மறுபக்கத்தில் சர்வதேச அழுத்தங்களினால் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றுவதற்கும் போர்க்குற்ற விசாரணைகளை நடத்தி, படையினரை குற்றவாளிகளாக தண்டிப்பதற்கும் அரசாங்கம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.
ஆகவே நாட்டில் பயங்கரவாதச் சூழல் இருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், வடக்கைப் பொறுத்தவரை படையினரின் இருப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதும் சிலருக்கு அவசியமாகும். இலங்கை படையினர் தமது பிரசன்னத்தை தக்கவைப்பதற்காகவும், ஒரு பதற்றச் சூழலை தோற்றுவிப்பதற்காகவும் இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றி இருக்கின்றார்களா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.
மறுபக்கத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச ஆயோரின் செல்வாக்கு இன்னும் கூட படையினரிடையே இருக்கின்றது. ஆகவே அவர்களும் தமது அரசியல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டு நெருக்கடிகளிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காகவும், அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை கொடுப்பதற்காவும் இப்படி ஒரு திட்டத்தை தீட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கலாம்.
அரசாங்கத்திற்கும், சில தேவைகள் இருப்பதை மறுக்க முடியாது, அதாவது இராணுவத்தினரிடம் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை சமாளிப்பதற்கும், தேசிய பாதுகாப்பு விடயத்தில் அச்சுறுத்தல்கள் முழுமையாக அகலவில்லை என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை மேலும் சில காலத்திற்கு இழுத்தடிப்புச் செய்வதற்கு கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்கும் இவ்வாறன நாடகம் ஒன்றை அரங்கேற்ற வாய்ப்புக்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழர் தரப்பில் இவ்வாறான ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்கான தேவை இல்லையா? என்ற கேள்விகளும் எழலாம், தேவை இருக்கின்றனது. எதற்காக? என்றால், விடுதலைப் புலிகள் முற்றாக அழிந்து விடவில்லை. அவர்கள் மீண்டும் உயிர் பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை உணர்த்துவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தை தமிழர்களின் வழிக்கு கொண்டுவரச் செய்யவும், புலம் பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஸ்திரப்படுத்தவும் இவ்வாறான சம்பவம் ஒன்றின் அவசியம் இருக்கின்றது.
ஒருவேளை விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலை நடத்துவதன் ஊடாக தமது மீள் எழுச்சியை வெளிப்படுத்த விரும்பி அதற்கான ஆயத்தமாக இந்த வெடிப்பொருட்களை வைத்திருந்தால் நிச்சயமாக புலனாய்வுத்துறை இவ்வளவு இலகுவாகக் கண்டெடுக்கும் வகையில் வைத்திருந்திருக்க மாட்டார்கள். உண்மையான புலிகள் ஆயுதங்களை இடமாற்றுவதற்கும் இரகசியங்களை பேணுவதிலும் எந்தளவு இறுக்கத்தை பின்பற்றினார்கள் என்பது ஒன்றும் இரகசியமில்லை. இங்கே, ஆயுதங்கள் மனைவிக்கு தெரியும் வகையிலேயே வீட்டில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அதைவிடுத்து முன்னாள் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி இலங்கைப் படையினர் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஆகவேதான் அதிகபட்சம், இப்படியான பரபரப்பை மட்டுமே படையினரால் அரங்கேற்ற முடியும் என்ற சந்தேகம் வலுக்கின்றது.
இராணுவத் தேவைக்காவோ, அரசியல் தேவைக்காகவோ இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தாலும், இதன் எதிரொலிப்பு தமிழ் மக்களையே தாக்கும். தற்போது தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதியையும். மீள் எழுச்சிக்கான முயற்சிகளையும் பாதிக்கும்.
அரசியல் கைதிகள் விடுதலையை தூரப்படுத்திவிடும். புதிய அரசாங்த்துடன் தற்போது தமிழ் மக்கள் நடத்தும் இணக்க அரசியல் தந்திரோபாயத்தை அர்த்தமற்றதாக்கிவிடும். தமிழ் மக்களை சந்தேகக் கண்கொண்டு அணுகும் சூழலை ஏற்படுத்தும். இதனால் மீண்டும் அரசுக்கு எதிரான மனோ நிலையோடும், ஏமாற்றத் தோடும் தமிழ் மக்கள் எதிர்ப்பு அரசியலுக்குள் முடங்கிப் போவார்கள்.
இதில் ஆறுதல் தருகின்ற விடயம் என்னவென்றால், இதே சம்பவம் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நடைபெற்றிருந்தால், இராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு வடக்கின் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் பரிசோதனை என்ற பெயரில் நுழைந்திருப்பார்கள், முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை மீண்டும் ஒரு தடவை முகாமுக்கு அழைத்து விசாரணை நடத்தியிருப்பார்கள்.
புதிய சோதனைச் சாவடிகளை நிறுவியிருப்பார்கள். ஓமந்தைச் சோதனைச் சாவடியில் எல்லோரையும் இறக்கி ஏற்றி, பரிசோதனை செய்திருப்பார்கள். நல்ல வேளையாக புதிய அரசாங்கம், இந்த குண்டுகள் மீட்கப்பட்டதை விசாரணை செய்வதை இராணுவத்திடம் ஒப்படைக்காமல், குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றது.
இதனால் அநாவசியமான நெருக்கடிகள் இல்லை. தேவையற்ற பதற்றங்கள் இல்லை. ஆனால் இவ்விடயம் தொடர்பில் கருத்துக் கூறிய ஜீ.எல்.பீரிஸை விசாரணைக்கு உட்படுத்தியது சற்று முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. அப்படிப் பார்த்தால் நாட்டில் ஊகங்கள் அடிப்படையிலும், அரசியல் நோக்கங்களுடனும், இனவாத அடிப்படையிலும், சுய இலாபத் தேவைகளுடனும் பலர் எழுந்தமானமான அல்லது அடிப்படையற்ற கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றார்கள். அவர்களை எல்லாம் அழைத்து ஏன் அப்படிக் கூறினீர்கள்? என்றும், எந்த அடிப்படையில் அவ்வாறு உங்களால் ஊகிக்க முடிந்தது? என்றும் ஒவ்வொருவரையும் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
அதையெல்லாம் விட்டுவிட்டு சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் வெள்ளவத்தைக்கு கொண்டுவர இருந்தவை என்று கூறியதற்காக ஒருவரை விசாரித்தவர்கள், இந்தக் குண்டுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இல்லை என்றவரிடம், எப்படி அதை இவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்? என்றோ, இந்தக் குண்டு கண்டு பிடிக்கப்பட்டதால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றவரிடமும், ஏன் விசாரணைகளை நடத்தவில்லை என்று கேட்கப்பட்டதில் நியாயம் இருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்ததைப்போல், இலங்கையிலுள்ள விசாரணைப் பொறிமுறைகளுக்குள்ளும் அரசியல் புகுந்துவிட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படலாம்.
-ஈழத்துக் கதிரவன்.