வலிகாமம் தெற்கு பிரதேசசபை தவிசாளர் பதவிக்கு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான - தமிழரசுக் கட்சியும் புளொட்டும் மோதின. இதில் உறுப்பினரான கருணாகரன் தர்சன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
|
இங்கு புளொட் 6 ஆசனங்களையும், தமிழரசு கட்சி 5 ஆசனங்களையும் பெற்றிருந்தன. இந்த நிலையில் இன்று நடந்த தவிசாளர் தெரிவினபோது, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஸ், புளொட் சார்பில் தர்சன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுரேஸ்குமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் ஆகியோரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
வாக்கெடுப்பினை பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதா இரகசிய வாக்கெடுப்பாக நடத்துவதா என கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்பு என 10 பேரும் இரகசிய வாக்கெடுப்பு என 20 பேரும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் நடபெற்ற முதல் சுற்று பகிரங்க வாக்கெடுப்பில் புளொட் சார்பில் நிறுத்தப்பட்ட கருணாகரன் தர்சன் 11 வாக்குகளையும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஸ் 09 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுரேஸ்குமார் 04 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் 06 வாக்குகளையும் பெற்றனர்.
குறைந்த வாக்கு பெற்றவர் நீக்கப்பட்டு இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டவிதிப்படி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுரேஸ்குமார் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு ஏனைய மூவருக்குமிடையில் 2 ஆம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், புளொட் வேட்பாளர் கருணாகரன் தர்சன் 12 வாக்குகளையும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஸ் 12 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் 06 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்போதும் குறைந்த வாக்கு பெற்றவர் நீக்கப்பட்டு மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டவிதிப்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சிவரூபன் லகிந்தன் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பங்காளிகளான தமிழரசும் புளொட்டும் மூன்றாம் சுற்று வாக்கெடுப்பில் நேருக்கு நேர் மோதின. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை. புளொட் வேட்பாளர் கருணாகரன் தர்சன் 12 வாக்குகளையும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஸ் 12 வாக்குகளையும் பெற்றனர். இதனால் பங்காளிகள் போட்டி மோலும் சுவாரஸ்யமானது.
இதனையடுத்து வாக்குப் பெட்டிக்குள் இரு வாக்குச் சீட்டுக்கள் மடித்து போடப்பட்டன. ஒன்று வெறுமையாக இருக்க இன்னொன்றில் வாக்குச் சீட்டு என எழுதப்பட்டிருந்தது. வாக்குப்பெட்டி மூடப்பட்டு குலுக்கப்பட்டபின் இருவரும் ஒவ்வொன்றை எடுத்தனர். இதில் வாக்குச் சீட்டு என எழுதப்பட்டிருந்த சீட்டினை எடுத்திருந்த புளொட் அமைப்பினைச் சேர்ந்த கருணாகரன் தர்சன் வெற்றி வெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் உப தவிசாளருக்கான பெயர்களைப் பிரேரிக்குமாறு கோரப்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கஜேந்திரா என்பவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பிரகாசைப் பிரேரித்தார். பிரகாசும் சம்மதம் தெரிவிக்க ஈபிடிபியைச் சேர்ந்த காயத்திரி பிரகாசின் தெரிவினை வழிமொழிந்தார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுமந்திரக் கட்சியைச் சேர்ந்த த.துவாரகன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பா.சுரேஸ்குமார் ஆகியோரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. இதனையடுத்து திடீரென எழுந்த ஒருவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இ.பரமேஸ்வரன் என்பவரது பெயரினையும் பிரேரித்தார். இதனால் தமிழரசுக் கட்சியிலிருந்து இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
உப தவிசாளருக்கும் 04 பெயர்கள் பிரேரிக்கப்பட்ட நிலையில் ஒரே கட்சிக்குள் இருவர் என போட்டி வந்தபோது சுதாகரித்துக் கொண்ட பிரகாஸ் திடீரென எழுந்து தான் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து போட்டி மூவருக்கானது. இதனையடுத்து பகிரங்க வாக்கெடுப்பிற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துவாரகன் 06 வாக்குகளையும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரலிங்கம் 15 வாக்குகளையும் பெற்றனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் வாக்கு எதனையும் பெற்றிருக்கவில்லை. இதன் மூலம் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரலிங்கம் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 பேருமாக 09 உறுப்பினர்கள் உப தவிசாளருக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்தனர்.
|
வலிகாமம் தெற்கு பிரதேச சபை புளொட் வசம்! - அரங்கேறிய பங்காளிச் சண்டை
Related Post:
Add Comments